ரோம், செப், 29-

ஜெர்மனியின் முன்னணி கால்பந்து அணியான பாயேன் முனீக்கின் நிர்வாகி பொறுப்பிலிருந்து கார்லோஸ் ஹென்ஸலோட்டி நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை நடந்த ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியில், பிரான்ஸின் பிஎஸ்ஜி அணியிடம் பாயேன் முனீச் 3 என்ற கோல் எண்ணிக்கையில் படுதோல்வி கண்டது.

இந்நிலையில் நிர்வாகி பொறுப்பிலிருந்து கார்லோஸ் ஹென்ஸலோட்டி நீக்கப்படுவதாக அதன் நிர்வாகம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. கால்பந்து உலகின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக கார்லோஸ் ஹென்ஸலோட்டி திகழ்கிறார்.குறிப்பாக ரியல் மாட்ரிட் அணி ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை 10ஆவது முறையாக வென்றபோது இவர்தான் நிர்வாகியாக இருந்தார்.

2016ஆம் ஆண்டு பாயேன் முனீக் அணியின் நிர்வாகி பொறுப்பிலிருந்து பெப் குவாடியலோ விலகிக் கொண்ட பிறகு, கார்லோஸ் ஹென்ஸலோட்டி அந்த பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் பாயேன் முனீக் ஜெர்மனி பொண்டஸ்லீகா கிண்ணத்தை வென்றிருந்தது.

ஆனால் இந்த பருவம் தொடங்கியது முதல் அவ்வணி சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த தவறியது. அதோடு பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டபோது, கார்லோஸ் ஹென்ஸலோட்டி ஆட்டக்காரர்களுடன் அணுகமான உறவை கொண்டிருக்கவில்லை என்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டின.

இதனிடையே அவர் நிர்வாகி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பாயேன் முனீக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஹொபன்ஹய்ன் அணியின் நிர்வாகி ஜூலியன் நெகல்ஸ்மென் பாயேன் முனீக் நிர்வாகி பொறுப்பை ஏற்பார் என தெரிகிறது.