ரவாங், மார்ச் 21-
மூன்று தவணை கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த லீ கீ ஹியோங் இன்று காலமானார்..அவருக்கு வயது 58.
புற்றுநோயால் அவதியுற்று வந்த கீ ஹியோங் காலை 10.00 மணிக்கு உயிரிழந்ததாக சின் சியூ டெய்லி தகவல் வெளியிட்டது.
கடந்தாண்டு சிலாங்கூர் மாநில தேர்தலில் லீ கெராக்கானைச் சேர்ந்த தியோ கியான் ஹோங்கை 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இத்தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்ட லீ மசீசவின் ஊய் ஹூய் வென்னை 1,702 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டில் மசீசவின் வோங் கூன் முன்னை 7,134 வாக்குகள் பெரும்பான்மையில் வீழ்த்தினார்.
இதனிடையே, மாநில அரசு சார்பில் லீயின் குடும்பத்தார் மற்றும் ஜசெகவிற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தொஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துக் கொண்டார்.
ஓர் அனுபவமிக்க தலைவரான லீயின் மறைவு கோல குபுபாரு மக்களுக்கு மட்டுமின்றி சுலாங்கூர் மக்களுக்கும் பெரிய இழப்பாகும் என்று ஓர் அறிக்கையில் அமிருடின் குறிப்பிட்டார்.
முன்னதாக தமக்கு கருப்பைப் புற்றுநோய் முதல் நிலையில் இருப்பதைக் கடந்த 2020ஆம் ஆண்டில் உறுதிப்படுத்திக் கொண்ட லீ, சிகிச்சைக்குப் பின்னர் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்றார்.
இவர் 2023 ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ஆண்டுத் தொடக்கத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.