2024 திவெட் & சீருடை இயக்க பதிவு: மந்திரி பெசார் தொடக்கி வைத்தார்

66

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 25-

2024ஆம் ஆண்டுக்கான திவெட் மற்றும் சீருடை இயக்க பதிவு நடவடிக்கையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 2,800 பேர் கலந்து கொண்டனர்.

இங்குள்ள சிவிக் சென்டரில் நடைபெற்ற இந்நிகழ்வை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற சில மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பயிற்சியில் சேர்வதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டன.

அதே வேளையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கண்காட்சியோடு மாணவர்களுக்கு பல்வேறு வகை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பினாங்கு, பேரா, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர் என பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 20 பேருந்துகளில் இடைநிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்த சிலாங்கூர் தமிழ் ஆலோசகர் சங்கம் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே சமயம், இங்குள்ள சிவிக் சென்டரை ஏற்பாடு செய்த பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் டி.என்.சுரேஷுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வருகையாளர்களுக்குத் தொடர்ச்சியாக 3,000 கோப்பைகள் காப்பியை வழங்கிய மைகாபி டிரக்கும் மறக்கப்படவில்லை.
“நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து திறமையான மற்றும் திறன்மிக்க இளம் தலைமுறையினரை இதுபோன்ற நிகழ்ச்சி வழி உருவாக்க முடிகின்றது” என்றார் குணராஜ்.