‘மங்கை நீ தொடர்’ அத்தியாயம் 3 நடிகர்களுடன் நேர்காணல்

76

கோலாலம்பூர், மார்ச் 26-

மங்கை நீ தொடரின் 3ஆவது அத்தியாயத்தில் நடித்தவர்களான கபில் கணேசன், ஜெய்ஸ்ரீ, வனேசா டி’குரூஸ் & ஆரோ சக்ரவர்த்தி ஆகியோருடன் நடத்தப்பட்ட நேர்காணலை இங்கு காண்போம்.

  1. மங்கை நீ தொடரில் நீங்கள் வகித்தக கதாபாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.

கபில்: வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளேன். உரையாடல்கள் நீளமாகவும் தகவல்கள் நிறைந்ததாகவும் இருந்ததால் சவாலாக இருந்தது. நான் தகவல்களைச் சரியாக வழங்க வேண்டியிருந்தது. ஒரு தொகுப்பாளராக, இது எனக்கு உற்சாகமாகவும் சவாலாகவும் இருந்தது. மங்கை நீ எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் இந்தக் கதை பெண்களைச் சித்தரிக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களும் தவறு செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செயல்படுவதற்கு முன் சிந்திப்பது அவசியம்.

ஜெய்ஸ்ரீ: ‘அவளல்’ அத்தியாயத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் ஏஞ்சலின் என்கிற வக்கீல். முதல்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதால் இது எனக்கு மிகவும் சவாலான பாத்திரமாக இருந்தது. உரையாடல், சட்ட விதிமுறைகள் மற்றும் உடல் பாணி ஆகியவை கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆனால், நான் இந்தக் கதாப்பாத்திரத்தை இரசித்தேன். இயக்குநரின் வழிகாட்டுதலால் என்னால் செவ்வென நடிக்க முடிந்தது. பார்வையாளர்கள் என்னை ஏஞ்சலினாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். மிகவும் சவாலான மற்றும் வித்தியாசமானப் பாத்திரத்தில் நடித்ததில் ஒரு கலைஞனாக எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

வனேசா: உறுதியான பெண்ணான பிரியா என்ற கதாப்பாத்திரத்தில் நான் நடித்தேன். இது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. எனக்கும் பிரியாவுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை நாங்கள் இருவரும் நடிகர்கள். அதைத் தவிர, எங்களுக்குள் ஒரே மாதிரியான பண்புகள் எதுவும் இல்லை. பிரியாவை ஒரு நடைமுறைக்குரிய நபர் என்று நான் குறிப்பிடுவேன். அவர் மிகவும் பொருள்சார்ந்தவர்.

ஆரோ: பெண்ணியத்தின் சுரண்டல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மோகன் என்பதே எனது கதாப்பாத்திரம். பல சூழ்நிலைகளில் நான் எப்படி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பதை அந்தக் கதாப்பாத்திரம் உணர்த்தியது. பொதுவாக எதையாவது பார்ப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முன்பு ஒரு சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தை நம் மனதில் மோகன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன்.

  1. மங்கை நீ தொடரில் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

கபில்: இது எனக்கு ஒரு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. எனது பெரும்பாலான படப்பிடிப்புகள் நீதிமன்றம் காட்சிகளாக ஆரோ, வனேசா மற்றும் ஜெய்ஸ்ரீ ஆகியோருடன் நடிக்க வேண்டியிருந்தது. என்னுடைய கதாப்பாத்திரத்தைச் செவ்வென நடிக்க இயக்குநர் யுவராஜ் மற்றும் உதவி இயக்குநர் அருண்குமரன் ஆகியோரின் ஆதரவு எனக்கு இருந்தது. எனக்கு இப்படி ஓர் அருமையான வாய்ப்பை வழங்கிய ஷைபா விஷன் மற்றும் டத்தின் ஷைலா வி அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய்ஸ்ரீ: படப்பிடிப்பு முழுவதும் என்னுடைய அனுபவம் நன்றாக இருந்தது. பலமுறை மீண்டும் காட்சிகளை மறுபடப்பிடிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டாலும் எல்லோரும் என்னுடன் மிகவும் பொறுமையாக இருந்தனர். எனது சக கலைஞர்கள் மற்றும் மங்கை நீ தொடரின் அனைத்து குழுவினரும் மிகவும் ஒத்துழைத்து உறுதுணையாக இருந்தனர். எனக்கு சில நல்ல நண்பர்களும் கிடைத்தனர்.

வனேசா: எதிர்மறைக் கூறுகளைக் கொண்ட கதாப்பாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை என்பதால் வித்தியாசமான அனுபவம் என்றுதான் கூறுவேன். சிறப்பாக நடிக்க முடியுமா என்பதை நினைத்துக் கொஞ்சம் பயந்தேன். இந்தத் தொடரில் காட்சியாகப் பயன்படுத்தப்பட்ட, மற்றொரு கதாப்பாத்திரம் வன்முறையாக நடந்துகொள்வதையும், ஏராளமான பொருட்களை உடைப்பதையும் காட்டும் காணொளியைப் பதிவுச செய்தது.வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதத் தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

ஆரோ: என் வீட்டில் இருப்பதைப் போலவே உணர்ந்தேன். அழகான நட்புகளும் உருவாகின. சிறந்த நடிப்பை வெளிக்கொணர ஒருவரையொருவர் ஒட்டிய ஆக்கபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்தி சிறந்தத் தொடரை உருவாகுவதை நாங்கள் சாத்தியமாக்கினோம்.