ம.இ.கா.வின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு! -3,014 கிளைத் தலைவர்கள் மகத்தான ஆதரவு

179

கோலாலம்பூர், மார்ச் 27-

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ம.இ.கா.வின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 3,014 கிளைத் தலைவர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


மொத்தம் 3,179 கிளைகள் உள்ளன. இவற்றில் 165 கிளைகளுக்குக் கோரம் இல்லை. அதோடு இவை ஆண்டுக் கூட்டங்களை நடத்தவில்லை என்பதால் இந்த கிளைகள் தேசிய தலைவருக்கான வேட்புமனு பாரங்களில் கையெழுத்திடவில்லை.

கட்சியின் 58.6 விதிகள்படி 3,014 கிளைத் தலைவர்களின் ஆதரவோடு அடுத்த 3 ஆண்டுகளுக்கு ம.இ.கா.வின் தேசிய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ம.இ.கா. தேர்தல் குழு தலைவரான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

தேசிய தலைவருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட கிளைத் தலைவர்கள் அனைவரும் ஆண்டுக் கூட்டத்தை நடத்தியவர்கள். இவர்கள் கோரம் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை சரவணன் சுட்டிக் காட்டினார்

இந்த தேசிய தலைவர் தேர்தல் ஒரு வரலாற்றுப்பூர்வமான தேர்தல். ஏனென்றால் கட்சிக்குப் பதவி மட்டுமல்ல. ஒரு தலைவரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

ம.இ.கா. தலைவர்கள் கண்மூடித்தனமாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுக்கவில்லை.

சரியான தலைமைத்துவம், ம.இ.கா.வை அடுத்த இலக்கை நோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைமைத்துவத்திற்காக அவரை கிளைத் தலைவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். .

இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாக்களிப்பு. காரணம் துன் சாமிவேலுவிற்குப் பிறகு ம.இ.கா.வைத் தொடர்ந்து 3ஆவது முறையாகக் கட்சியால் தேர்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆவார்.

எதற்காக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம்? கண்மூடித்தனமாக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய கட்சி ம.இ.கா. அல்ல. ம.இ.கா. தலைவர்கள் அனுபவம் நிறைந்தவர்கள். ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.

துன் சாமிவேலுவிற்குப் பின்னர் எந்த வித அரசாங்கப் பதவியும் இல்லாமல் 3 தவணைகள் தொடர்ச்சியாக கட்சியை திறம்பட வழிநடத்தி வருபவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

அடுத்து, துன் சாமிவேலுவிற்குப் பிறகு ம.இ.கா. தலைவத்துவத்தில் கட்சிக்காக பல மில்லியன் சொத்துகளைக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்காமல் சொந்தமாக வாங்கிச் சேர்த்தவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

இத்தகைய சீரிய தலைமைத்துவத்தை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கொண்டிருப்பதன் காரணமாகத்தான் கிளைத் தலைவர்கள் அவரை அடுத்த தவணைக்கும் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் சரவணன்.