சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயத்திற்கு வெ.15,000 மானியம்: -அமைச்சர் கோபிந்த் சிங் வழங்கினார்!

64

சபாக் பெர்ணம், மார்ச் 28-

சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 15,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

நடந்து முடிந்த பங்குனி உத்திரத் திருவிழாவின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்வாலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகாரி செனட்டர் சுரேஷ் சிங் 15,000 வெள்ளி மானியத்திற்கான காசோலையை ஆலயத் தலைவர் இரா.முனியாண்டியிடம் ஒப்படைத்தார்.

வேலை பளு காரணமாக கோபிந்த் சிங் அன்றைய ஆலய விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் அவரின் பிரத்தியேக செனட்டர் சுரேஷ் சிங் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர் சிறப்புரையாற்றிய செனட்டர் சுரேஷ் சிங் தம்முடைய சார்பில் இந்த ஆலயத்திற்கு திறன் தொலைக்காட்சி ஒன்று வாங்கிக் கொடுப்பதாகவும் ஆலய நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தார்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் இந்திய மக்களின் வசதிக்காகவும் இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்காகவும் ஆலயத்திற்கு சொந்தமான அருகிலுள்ள 1 ½ ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் பெரிய மண்டபம் ஒன்று கட்டுவதற்கு ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான மானியத்தைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.