ம.இ.கா.வின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு ஆற்றல்மிக்க இளைஞர்கள் அவசியம்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்து

151

கோலாலம்பூர், மார்ச் 29-

நாட்டிலுள்ள இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி ம.இ.கா. எதிர்காலத்தில் இது சீரிய தலைமைத்துவத்தைப் பெற்றிருக்கவும் மக்களுக்கு அளப்பரிய சேவையைப் புரியவும் ஆற்றல்மிக்க இளைஞர்கள் மிக அவசியம் என்று 3ஆவது தவணையாக ம.இ.கா.வின் தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

வலுவான ஒரு கட்சியாகவும் கம்பீர தோற்றத்தைக் கொண்ட ஒரு கட்சியாகவும் ம.இ.கா. தொடர்ந்து பீடுநடை போடுவதற்கு இக்கட்சியை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்குத் தகுதியும் திறமையும் கொண்ட இளைஞர்கள் தேவை என்று இங்குள்ள ம.இ.கா. தலைமையகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேசிய தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய உரையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

‘அமரர் துன் சாமிவேலு’ என்னிடம் கட்சியின் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்தார். ம.இ.கா. தலைமையகத்தின் அருகிலுள்ள நிலத்தை வாங்கினோம். அதுமட்டுமல்லாது அந்த நிலத்தில் 3 மாடி கொண்ட கட்டடத்தை எழுப்புவதற்கான பணிகளிலும் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இவை அனைத்தும் துணைத் தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணனுடன் கலந்தாலோசனை செய்து இருவருமாக சேர்ந்து முடிவெடுத்து இதனை செயல்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

எனது உடன்பிறவா தம்பியாக சரவணன் திகழ்ந்து வருகிறார். கட்சியின் துணைத் தலைவராக இருந்து அவர் என்னோடு பல சந்தர்ப்பங்களில் இணைந்து ஒத்துழைப்பு நல்கி வருவது மன நிறைவை அளிக்கிறது.

கட்சி தொடர்ந்து வலுவுடனும் மற்ற கட்சிகளுக்கு மத்தியில் கம்பீர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்குக் கிளைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரின் பங்களிப்பும் மிக அவசியம்.

சமுதாயத்திற்கு ஒரு பாதுகாவலராக ம.இ.கா. தொடர்ந்து விளங்கும் என்பதை நான் இங்கு உறுதியளிக்கின்றேன்.
எனக்குப் பிறகு தலைவர் பொறுப்பை ஏற்கவிருக்கும் டத்தோஸ்ரீ சரவணனும் கட்சியைத் தொடர்ந்து சீரிய முறையில் வழிநடத்துவார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு 25 மில்லியன் மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனை அவர் நிறைவேற்றியதோடு தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாண்டும் அந்த நிதியை வழங்கினார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.

“என்னை அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். துணைத் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர்கள் இவர்கள் அனைவரின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக மிக்க நன்றி. எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.