புத்ரா ஜெயா மார்ச் 31-
பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் தற்போது ஒரு கோடி வெள்ளியில் பிரம்மாண்டமான மாநாட்டு மண்டபத்தைக் கட்டி வருகிறது.
70 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைந்திருக்கும் வேளையில், இன்னும் 30 விழுக்காடு கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடைய 30 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது.
மூன்று மாடிகள் கொண்ட இம்மண்டபத்தைத் திருமணம் உட்பட அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மண்டபத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய சமுதாயத்திற்கும் இந்திய மாணவர்களின் கல்வி நிதிக்கும் பயன்படுத்தப்படும்.
மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான மண்டபம் இல்லை எனலாம்.
ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் அளவில் கட்டப்படும் இந்த மண்டப கட்டட நிதிக்கு நிதி திரட்டும் வகையில் நேற்று இரவு புத்ராஜெயா மேரியோட் தங்கும் விடுதியில் மாபெரும் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது
ஆலய தலைவர் டத்தோ புத்ரி சிவம் மற்றும் கட்டட குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையேற்றார்.
பூச்சோங 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாநாட்டு மண்டப கட்டட நிதிக்கு ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.
