மலேசிய மக்களின் தேர்வாக மைபிபிபி உருமாற வேண்டும்! -டத்தோ லோகபாலா

89

கோலாலம்பூர், ஏப்.1-

மலேசிய மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு கட்சியாக மைபிபிபி உருமாற வேண்டும் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

உதவி கோரி வரும் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும் . அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும். நமது சேவையே கட்சியின்பால் மக்கள் நன்மதிப்பைக் கொள்ள வகை செய்யும் என்றார்.

“பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த மைபிபிபி இன்று மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதற்கு வித்திட்டவர் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் அமரர் டத்தோஸ்ரீ மெக்லின் டிகுரூஸ் ஆவார் ” என்றார் அவர் .

கட்சி மீது மூத்த தலைவர்கள் கொண்ட கடப்பாடு மைபிபிபி முன்னாள் தலைவருடனான பதவி போராட்டத்தில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

“கடந்த 2019ஆம் ஆண்டு மைபிபிபி கட்சியின் பதிவு ரத்தானது. எனினும், இதனை 2023இல் காப்பாற்றி கட்சியை மறுமலர்ச்சி காணச் செய்தவர் டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ்” என்று இங்குள்ள செந்தூல் சமூக மண்டபத்தில் விலாயா மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸை மைபிபிபியின் சட்டப்பூர்வ தலைவராக நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து கட்சியின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது என்றார்.

“இன்று மைபிபிபி கட்சி விசுவாசமிக்க தொண்டர்களின் ஒத்துழைப்போடு மீண்டும் பீடு நடை போடத் தொடங்கிவிட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முன்னாள் தேசிய தலைவர் நினைவில் வாழும் டத்தோஸ்ரீ மெக்லினின் பணியை நாங்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறோம்” என்று லோக பாலாமேலும் சொன்னார்.

விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சுரேந்திரன், மகளிர் பிரிவு தேசிய தலைவி புனிதா முனுசாமி, தேசிய பொருளாளர் டத்தோ டல்ஜிட் சிங், தேசிய தகவல் பிரிவு தலைவர் ஸ்டீவன், துணைத் தலைவர் குமார் உட்பட பல முக்கிய தலைவர்களும் இந்த மாநாட்டிற்கு வருகை புரிந்தனர்.