கோலாலம்பூர், ஏப்.1-
நாட்டின் பல பகுதிகளில் தனது கிளை நிறுவனங்களை விரிவுபடுத்தி வரும் இந்தியா கேட் நிறுவனம் தனது 8ஆவது கிளையைச் செந்தூல் வட்டாரத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்தது.
இதனை மஇகாவின் தேசிய உதவி தலைவர் டத்தோ டி.மோகனும் இந்தியா கேட் உணவகத்தின் உரிமையாளர் சரவணன் சுப்பிரமணியத்தின் தாயார் அமிர்தவள்ளியும் இணைந்து அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர் .
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை உண்டு மகிழலாம் என்று இந்தியா கேட் உணவகத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார்.
“உணவக வர்த்தகத்தில் இந்தியா கேட் நிர்வாகம் கொண்டிருக்கும் அனுபவம் முறையாக இன்று 8ஆவது கிளையை இவர்கள் திறப்பதற்கு வழி வகுத்துள்ளது” என்றார்.

இந்தியர்கள் அதிகம் வாழும் செந்தூல் வட்டாரத்தில் இப்புதிய உணவகம் அமைந்திருப்பது சுவையான உணவை விரும்பும் மக்களின் தேவையை நிறைவேற்றும் என்று இந்தியா கேட் குழுமத்தின் தலைவர் சரவணன் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
” சுவையான உணவை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் 50க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை நாங்கள் பரிமாறுகிறோம்” என்றார் அவர்.

மேலும், ஒரே சமயத்தில் 140 பேர் அமர்ந்து உணவு உட்கொள்ளக்கூடிய வசதியைக் கொண்ட செந்தூல் இந்தியா கேட் தங்களின் உணவக தொடரில் மற்றொரு மைல் கல்லாக அமையும் என்றும் அவர் சொன்னார்.
புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட 1,000திற்கும் மேற்பட்டோருக்கு இலவசமாகப் பிரியாணி உணவு பரிமாறப்பட்டது.