புதிய வியூகங்களில் விலாயா மைபிபிபி! -சத்தியா சுதாகரன்

279

கோலாலம்பூர் , ஏப்.1-

உறுப்பினர்களுக்கான அறவாரியம், கட்சி உயர் பதவிகளில் பெண்களுக்கு சரிசமமான வாய்ப்பு என ஆக்கப்பூர்வ வியூகங்கள் வாயிலாக விலாயா மாநில மைபிபிபியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல தாம் இலக்கு வகுத்திருப்பதாக இதன் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

“மைபிபிபி இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோக பாலாவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சி தற்போது மீண்டும் பீடு நடை போடத் தொடங்கி விட்டது. இதற்கேற்ப விலாயா மாநில மைபிபிபியும் பல ஆக்கப்பூர்வ திட்டங்களை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது” என்றார் சத்தியா.

“கட்சிக்குப் பக்கபலமாக இருப்பவர்கள் உறுப்பினர்கள். இவர்களின் நலன் காக்க ஓர் அறவாரியத்தை அமைக்கவிருக்கிறோம். இது போலவே நாட்டிற்கும் வீட்டிற்கும் முதுகெலும்பாக இருப்பவர்கள் பெண்கள். இவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் எங்களின் நோக்கமாகும்” என்று இங்குள்ள செந்தூல் சமூக மண்டபத்தில் நடைபெற்ற விலாயா மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

“கட்சி இப்போது எழுச்சி பெறத் தொடங்கி விட்டது. நீதிமன்ற வழக்குகளில் இருந்தபோது கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் கட்சிக்குத் திரும்பி விட்டனர். இது கட்சிக்கு வலு சேர்த்துள்ளது” என்றார்.

அதே சமயம், விலாயா மாநில மைபிபிபியில் தொகுதி தலைவர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவினர் அனைவரும் தங்களின் கடமையை உணர்ந்து செயலாற்றி வருகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பு கட்சியின் மறுமலர்ச்சி பயணத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கட்சியின் இடைக்கால தலைவரே தேசிய தலைவராக வேண்டும். நாட்டின் அரசியலில் அனைவரும் மதிக்கத்தக்க ஒரு கட்சியாக மைபிபிபி திகழ்வதற்கு சீரிய தலைமைத்துவம் தேவை. இதற்குப் பொருத்தமானவர் டத்தோ லோக பாலா.

“கட்சி சின்னத்தை மாற்றி கட்சிக்குப் புதுத் தோற்றத்தை ஏற்படுத்தும் இவரின் பரிந்துரையை விலாயா மாநில மைபிபி ஏகமனதாக ஆதரிக்கிறது” என்று இம்மாநாட்டில் பலத்த கரவொலிக்கிடையே சத்தியா கூறினார்.