சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து தெங்கு ஸாஃப்ருல் விலகல்!

61

கோலாலம்பூர், ஏப்.1-

அம்னோ சிலாங்கூர் பொருளாளர் பதவியிலிருந்து தாம் விலகுவதாகக் கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில அம்னோ தேசிய அம்னோவின் விதிமுறைகள்படி நடக்காதது தெரிய வந்ததைத் தொடர்ந்து இப்பொறுப்பிலிருந்து தாம் விலகுவதாக தமது முகநூலில் தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

“கட்சியை எழுச்சி பெறச் செய்வதற்காக தேசிய நிலையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி எத்தகைய திட்டங்களை மேற்கொண்டு வருகிறார் என்பதை நான் கண்ணுற்று வருகிறேன். ஆனால் அந்த உத்வேகத்தை மாநில ரீதியில் காண முடியவில்லை” என்றார் அவர்.

ஆக்கப்பூர்வ பணிகளுக்குத் தம்மால் எந்தவொரு பங்களிப்பையும் வழங்க முடியவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வதே சிறந்தது என்பதே என்னுடைய கருத்து என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத்திலிருந்து அம்னோவின் உச்சமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அம்னோவின் மறுமலர்ச்சிக்காக சிலாங்கூர் மாநிலம் ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் அம்மாநில அம்னோ பொருளாளர் பதவியை ஏற்றேன். எனினும், எனது பங்களிப்பை என்னால் செய்ய முடியவில்லை எனும் போது இப்பதவியிலிருந்து விலகுவதே சிறந்த முடிவு என்று நான் கருதுகிறேன் என்றார்.

-பெரித்தா ஹாரியான்