திருத்தம் செய்யப்பட்ட புஸ்பாலின் வழிகாட்டி இறுதி கட்டத்தில்! -துணையமைச்சர் தியோ

171

கோலாலம்பூர், ஏப்.2-

வெளிநாட்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விண்ணப்ப நிறுவனம் (புஸ்பால்)-இன் திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

இத்திருத்தம் எல்.ஜி.பி.டி., 3ஆர் உள்ளிட்ட சில முக்கிய கூறுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

“புஸ்பாலின் திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டியை மேம்படுத்துவதன் மூலம் குறிப்பிடப்பட்ட எதிர்மறையான கூறுகள் மேம்படுத்தப்படுவதோடு மட்டுமின்றி அவற்றை அகற்றவும் முடியும்” என்று மேலவையில் கேள்வி-பதில் அமர்வின் போது கூறினார்.

முன்னதாக, எல்.ஜி.பி.டி.கியூ. கருத்தியல் பின்னணி கொண்ட எந்த மேற்கத்திய கலைஞர்களும் நாட்டில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய, பொழுதுபோக்கு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த செனட்டர் முசோடாக் அகமட்டின் கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் பேசிய கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, புஸ்பால் குழுவில், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை (ஜாகிம்) உட்பட அமைச்சுகள், துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய 16 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

“தேசிய கொள்கை, பாதுகாப்பு, மதம், கலாச்சாரம் போன்ற கூறுகளை உட்படுத்திய பிரச்சினைகள், பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் ஆகியவை புஸ்பால் உறுப்பினர்களின் சந்திப்புக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்கு முன் முழுமையாக விவாதிக்கப்படும். எனவே, இது தொடர்பு அமைச்சால் மட்டும் எடுக்கப்படும் முடிவு அல்ல” என்று அவர் விளக்கமளித்தார்.

கடந்த 2021இல் தேசிய கலாச்சாரக் கொள்கையை வெளியிட்ட சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு அமைச்சும், புஸ்பாலில் இடம்பெற்றுள்ளதை தியோ சுட்டிக்காட்டினார்.

“அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தேசிய கலாச்சார கொள்கையின் கீழ் வழிநடத்தப்படுவதை உறுதி செய்வதாகும். அதோடு, பொது இடங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கலைஞர்களின் பின்னணி குறித்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தியோ குறிப்பிட்டார்.