மருத்துவ மாணவி வினோஷாவிற்கு எம்.ஐ.இ.டி. வெ.65,000 கடனுதவி!

59

கோலாலம்பூர், ஏப்.3-

ம.இ.கா.வின் கல்வி கரமான மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகம் (எம்.ஐ.இ.டி.) ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் வினோஷா என்ற மாணவிக்கு 65,000 வெள்ளி கல்வி கடனுதவியை வழங்கியுள்ளது.

தனது மகளின் மேற்கல்விக்காக பல இடங்களில் நிதியுதவி கோரி வினோஷாவின் தாயார் முயற்சி மேற்கொண்டுள்ளார். எந்த முயற்சியும் பலனளிக்காததைத் தொடர்ந்து அவர் ம.இ.கா. தலைமையகத்தை நாடியுள்ளார்.

இந்த மாணவியின் கல்வி தடைபடாமல் இருப்பதற்கும் இவரின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டும் ம.இ.கா.வின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இம்மாணவிக்கு இவ்வாண்டு முழுவதுமான செலவு தொகையான 65,000 வெள்ளியை வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை ம.இ.கா.வின் கல்வி குழுத் தலைவரான டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் இம்மாணவியின் தாயாரிடம் ஒப்படைத்தார்.

இம்மாணவி ஏற்கனவே எம்.ஐ.இ.டி. வாயிலாக 35,000 வெள்ளி கடனுதவி பெற்றுள்ளார். இதுவரை எம்.ஐ.இ.டி. 100,000 வெள்ளி கடனுதவியை இந்த மாணவிக்கு வழங்கியிருப்பதாக டத்தோ நெல்சன் சுட்டிக் காட்டினார்.

உயர்கல்வி தொடரும் இந்திய மாணவர்களுக்கு நிதி ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது. அதோடு அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவதே ம.இ.கா.வின் தலையாய நோக்கம் என்றார் அவர்.

இதனிடையே, தனது மகளுக்கு 65,000 வெள்ளி நிதியுதவியை வழங்கி அவரின் மேற்கல்வி தொடர்வதற்குப் பேருதவி புரிந்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருக்கு இவ்வேளையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக வினோஷாவின் தாயார் குறிப்பிட்டார்.

அதோடு, டத்தோ நெல்சன் மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் சுமூகமான முறையில் முடித்துத் தந்த ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் ஆகியோரோடு தனது மகளின் ரஷ்யாவுக்கான விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் தமிழ் லென்ஸ் ஆசிரியர் ஆகியோருக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.