நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க சட்டத்தில் திருத்தம்! -டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி

40

கோலாலம்பூர், ஏப்.3-

சுகாதார அமைச்சு ‘பேரரல் பாத்வே’ மீதான 1971 மருத்துவ சட்டத்தில்  (சட்டம் 50) விரைவில் திருத்தம் கொண்டு வரும்படி அமைச்சரவையிடம் பரிந்துரை செய்யவிருக்கிறது.

இந்த பரிந்துரையானது இப்பயிற்சியை முடித்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் நிபுணர்களாகத் தங்களைப் பதிந்து கொள்வதற்கு உதவும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதன் முக்கிய நோக்கம் நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றும் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்ப்பதாகும்.

இச்சட்டம் விரைவில் அமல்படுத்தப்படுவதற்கு ஏதுவாக வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 3ஆவது தவணைக்கான 2ஆவது கூட்டத்தில் சட்டம் 50இல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குச் சுகாதார அமைச்சு இந்த பரிந்துரையை அமைச்சரவையில் முன்வைக்கும் என்று கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கிப்ளி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.    

-பெரித்தா ஹாரியான்