சித்திரை புத்தாண்டு: சிலாங்கூர் வேஃப் இயக்கம் 150 பெண்களுக்கு சேலைகள் & பலகாரங்கள் அன்பளிப்பு!

71

செமினி, ஏப்.14-

சித்திரை புத்தாண்டையொட்டி சிலாங்கூர் மாநில சமூகநல மற்றும் தொண்டூழிய மேம்பாட்டு இயக்கம் (சிலாங்கூர் வேஃப்) தனது உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 150 பெண்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்பு பலகாரங்களை வழங்கியது.

இயக்க உறுப்பினர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிமார்களைச் சிறப்பிக்கும் பொருட்டு அவர்களுக்கு சேலைகள், இனிப்பு பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதாக இவ்வியக்கத்தின் ஆலோசகர் ராஜன் முனுசாமி கூறினார்.

விஷ்ணு தேவ் தலைமையில் இவ்வியக்கம் இதுபோன்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் செமினி வாழ் மகளிர் அமானா இக்தியார், தெக்குன் போன்றவற்றோடு மாநில அரசாங்கத்தின் ஐசிட், சித்தம் உள்ளிட்ட அனைத்து உதவி திட்ட வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகர்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கி வரும் பல்வேறு கடனுதவி திட்டங்களுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ராஜன் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக, இந்திய மகளிர் தொழில்முனைவோருக்காக அமானா இக்தியார் மலேசியா நிதியகத்தின் வாயிலாக கூடுதலாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.

இதற்காக டத்தோ ரமணனுக்கு நன்றியையும் பாராட்டையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, சிலாங்கூர் வேஃப் உறுப்பினர்கள் சுற்று வட்டார மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருவதோடு தனது அரசியல் பயணத்திற்கு இவர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் உலு லங்காட் பிகேஆர் தொகுதி தலைவருமான ராஜன் சுட்டிக் காட்டினார்.

செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ஜூனன், சந்திரன் ராமசாமி ஆகிய இருவரோடு செமினி கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.