சேலம், ஏப். 15-
சேலம் ஸ்ரீ சண்முகா கல்வி நிலையத்தில் உருவாக்கப்பட்ட இன்னோஹப் (innohub) எனப்படும் மென்பொருள் நிறுவன அலுவலகத்தை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன், தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் எம்.தனசேகரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
முன்னதாக சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிலையத்திற்கும் மலேசிய ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள மாணவர்கள் அங்கே சென்று கல்வி பயில்வதற்கும் அங்குள்ள மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடர்வதற்கும் வழிவகை செய்கின்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய நிகழ்ச்சிக்கு பிறகு மாற்றிக் கொள்ளப்பட்டது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் உலக தரம் வாய்ந்த ஸ்ரீ சண்முகா கல்வி நிலையத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய அங்கீகாரம் என டத்தோஶ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட இணக்கம் தெரிவித்த சேலம் ஸ்ரீ சண்முகா கல்வி நிலையத்திற்கும் அவர் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
விழாவிற்கு கல்லூரி தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தலைமை இயக்குனர் திருமூர்த்தி ஆறுமுகம், இணை செயலாளர் கோகிலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.