கோலகுபு பாரு இடைத்தேர்தல்: ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை ஆதரிப்போம்! -டத்தோ லோகபாலா

63

கோலாலம்பூர் ஏப்.21-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் களமிறங்கும் வேட்பாளரை மைபிபிபி ஆதரிக்கும் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார் .

“இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளருக்கு மைபிபிபி தனது முழு ஆதரவை வழங்கும்” என்றார் அவர்.

ஜெகதீசனை தலைவராகக் கொண்ட உலு சிலாங்கூர் மைபிபிபி தொகுதி மொத்தம் 12 கிளைகளைக் கொண்டிருப்பதாக இங்குள்ள மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெறும் என்ற தகவலையும் இச்செய்தியாளர் கூட்டத்தில் அவர் வெளியிட்டார்.

கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர் மைபிபிபி கட்சியின் 72ஆம் ஆண்டு நிறைவு விழா அனிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதில் டத்தோ லோகபாலா, மைபிபிபி கட்சியின் முதிர்நிலை உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, தலைமைச் செயலாளர் டத்தோ இண்டர் சிங், டத்தோ இளையப்பன், தகவல் பிரிவு தலைவர் ஸ்டீவன், இப்பிரிவின் துணைத் தலைவர் குமார், சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் பிரிவு தலைவி புனிதா முனுசாமி உட்பட அனைத்து உச்சமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.