காஜாங், செப், 29-

மைக்கியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன், அவரது துணைவியார், புவான் ஸ்ரீ வீவியன் ஈஸ்வரன் ஆகியோரின் ஏற்பாட்டில் சரஸ்வதி பூஜை, வெஸ்ட் கன்ட்ரி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

சரஸ்வதி பூஜை மாணவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும் பூஜை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இப்பூஜையில் கலந்து கொள்ள அருகிலுள்ள வெஸ்ட் கன்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்பூஜைக்குப் பிறகு, டான் ஸ்ரீ-யும் புவான் ஸ்ரீ-யும், அப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 135 மாணவர்களுக்குப் பள்ளித் தளவாடப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினர். கல்வி கற்ற சமுதாயமாகவும் சமய போதனை நிறைந்த சமுதாயமாகவும் நாம் திகழ வேண்டும்.

ஆகையால், பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும், சமய போதனையிலும் நம் பிள்ளைகள் அதிகம் ஈடுபட வேண்டும் எனவும், டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் மாணவர்களை அழைத்து சரஸ்வதி பூஜையை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

நமது சமய போதனைகள் காலம் தொட்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பேணிக் காக்கப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையினரும் அதனைக் காக்க பெற்றோர் வழிவகுத்து பிள்ளைகள் சமய கல்வி கற்க, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டு கொண்டார்.