கூலாய் வட்டார ஆலயங்கள் ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்கலாம்! –துணையமைச்சர் தியோ நீ சிங்

60

கூலாய் , ஜூன் 3-

கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் 18 ஆலயங்களுக்கும் இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கும் மொத்தம் 97,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முழுமையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் இத்தொகுதியின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்ககீகரிக்கப்பட்டதாக இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

இத்தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கூலாய் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்கவிருப்பதாக தொடர்பு துணை அமைச்சருமான தியோ உறுதியளித்தார்.

“கூலாய் நாடாளுமன்ற மக்களின் நல்லிண்ணக்கமும் ஒற்றுமையும் தொடர்ந்து காக்கப்படும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து சமயத்தினருக்குமான நிதி ஒதுக்கீடு அரசியல் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, இத்தொகுதியின் கீழ் அமைந்திருக்கும் லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் ஆலயம் ; கூலாய், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ; செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் தியோ கலந்து சிறப்பித்தார்.

இதில், லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் மற்றும் கூலாய், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயங்களுக்கு 5,000 வெள்ளி நன்கொடையாகவும், செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலயத்திற்கு 3,000 வெள்ளி நன்கொடையும் ஒதுக்கீடு செய்யப்படிருப்பதாக தியோ குறிப்பிட்டார்.