இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் உத்வேகம் மஇகாவிற்கு மேலும் வலுசேர்க்கும்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

77

கோலாலம்பூர், ஜூன் 8-

நாட்டிலுள்ள இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாகத் திகழும் மஇகா கம்பீரத் தோற்றத்துடன் பீடுநடை போடுவதற்கு அதன் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் செயல்பாடுகள் மிக முக்கியம் என்று கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வருங்காலங்களில் இக்கட்சி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பதற்குத் தற்போதைய இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியம். அவ்வகையில் இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவினர் இந்த கட்சியைத் திறம்பட வழிநடத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இப்பிரிவினரின் பங்களிப்பு கட்சி மேலும் வலுப்பெறுவதற்கு வகை செய்யும் என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் பொறுப்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அரவிந்த் கிருஷ்ணனும் துணைத் தலைவராக கேசவன் கந்தசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அதே வேளையில், இப்பிரிவின் மத்திய செயலவை உறுப்பினர்களாக சிலாங்கூரைச் சேர்ந்த சுகன்ராஜ் சுப்ரமணியமும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த கலையரசன் வசந்தனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு பொறுப்புக்கு 29 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மகளிர் பிரிவின் தேசிய தலைவியாக ஜோகூரைச் சேர்ந்த சரஸ்வதி நல்லதம்பியும் துணைத் தலைவியாக நெகிரி செம்பிலானைச் சேர்ந்த டாக்டர் தனலெட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பிரிவின் மத்திய செயலவை உறுப்பினர்களாக விக்னேஸ்வரி பாபுஜியும் கிருஷ்ணவேணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதே வேளையில், 18 செயற்குழு உறுப்பினர்கள் இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விவரித்தார்.

புத்ரா பிரிவு தலைவராக டாக்டர் சத்தீஷும் துணைத் தலைவராக டாக்டர் அமர் பீனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பிரிவுக்கு 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து புத்ரி பிரிவு தலைவியாக தீபா சோலைமலையும் துணைத் தலைவியாக பிரேமளாவும் தேர்வு பெற்றனர். இப்பிரிவுக்கு 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.