சிறார்களை கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்! -டத்தோ காந்த ராவ்

162

கோலாலம்பூர், ஜூன் 10-

சிறார்களை கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக மலேசிய தெலுங்கு அறவாரியம் தொடர்ந்து கோல்ஃப் போட்டியை ஏற்பாடு செய்து வருவதாக இவ்வாரியத்தின் தலைவர் டத்தோ காந்த ராவ் தெரிவித்தார்.

மலேசிய தெலுங்கு அறவாரியம் 3ஆவது ஆண்டாக நட்பு ரீதியிலான கோல்ஃப் போட்டியை நடத்தியது. இதில் கூட்டுறவு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் சார்பில் சிறப்பு விருந்தினராக டத்தோ அன்புமணி கலந்து கொண்டார்.

இங்குள்ள கோல்ஃப் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என 60 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவருக்கும் வாழை இலையில் பாரம்பரிய இந்திய உணவு பரிமாறப்பட்டது.

இப்போட்டியில் மை கித்தா அமைப்பு, கெர்லிங் தமிழ்ப்பள்ளி குருகுல மாணவர்கள் மற்றும் கெர்லிங் முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி சமூக நல இல்லங்களுக்கு வழங்கப்படும் என்றார் காந்த ராவ்.

ஒரு காலத்தில் குணசேகரன், ராமையா போன்ற இந்தியர்கள் கோல்ஃப் விளையாடினர். ஆனால் இன்றைய இளைஞர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.இருந்த போதிலும், ஆர்வமுள்ளவர்களை இந்த விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து வந்த பொறுப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“ஆர்வம் உள்ளவர்களுக்கு கோல்ப் பயிற்சி அளிக்கவும், பள்ளி மூலம் விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.