கோலாலம்பூர், செப். 30-
தமிழ்ப்பள்ளி மாணவர்களை பூப்பந்து விளையாட்டுத்துறையில் மேம்படுத்த வேண்டும் எனும் வேட்கையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டிலான மாபெரும் எஸ்.எம்.சி பூப்பந்து சுழற்கிண்ணப் போட்டி இன்று தேசிய அளவில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்றது.

இந்த போட்டியின் வாயிலாக பூப்பந்து விளையாட்டுத்துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை அடையாளம் காண்பதோடு உலக அளவில் சாதனையை படைக்கக்கூடிய ஒரு பூப்பந்து வீரரை கண்டறிவதே இதன் அடிப்படை நோக்கம் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் யூத் கோர் தலைவர் சுரேந்திரன் கந்தசாமி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடந்த எஸ்.எம்.சி பூப்பந்து போட்டியில் கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பூபதி முதல் இடத்தை தட்டிச் சென்றது மட்டுமல்லாமல். மலேசிய பூப்பந்து மன்றத்தின் ஆதரவோடு, பல விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார்.  கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இப்பூப்பந்து போட்டியில் தேசிய அளவில் 144 தமிழ்ப்பள்ளிகள் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நடத்தப்படும் இப்போட்டிக்கு ஒரு பள்ளி கூடுதலாக 145 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றது மிகப்பெரிய சாதனை என்றும் வரும் காலங்களில் மேலும் பல தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ள வேண்டியதே எங்களது இலக்கு என்றும் எஸ்.எம்.சி நிறுவனத்தின் இணை இயக்குனர் அ. பிரகாஷ் ராவ் விருப்பம் தெரிவித்தார்.

மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த இப்போட்டி நிகழ்விற்கான பரிசு தொகை உட்பட இதர செலவுகள் அனைத்தையும் பிரகாஷ் ராவ் ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி இன்று காலை, சிலாங்கூர் (வைட் பேஃரி பேட்மிண்டன் அரங்கம்), கோலாலம்பூர் (ஸ்டார் பிளஸ் பேட்மிண்டன் அரங்கம்), ஜொகூர் (ஜொகூர் அரங்கம், தாமான் பெர்லிங்), மலாக்கா (கொம்ப்ளெக்ஸ் பத்து பெரண்டாம்), நெகிரி செம்பிலான் (கொம்பிளக்ஸ் சுக்கான் பானோய்,சிரம்பான்) ஆகிய மாநிங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதர மாநிலங்களான கெடா (கொம்ப்ளெக்ஸ் சுக்கான் அமான் ஜெயா,சுங்கை பெட்டானி), பினாங்கு (பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்கம், பட்டர்வெர்ட்), பேராக் (ஏச்.எஸ்.டி பேட்மிண்டன் அரங்கம், ஈப்போ), பகாங் (ஹய் முன் ரெபிஸ்,பெந்தோங்) ஆகிய இடங்களில் இப்போட்டி இந்த மாதம் 7ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கவிருக்கும் இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் தமிழ்ப்பள்ளிக்கு வெ.1,000, இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தமிழ்ப்பள்ளிக்கு வெ.500 வழங்கப்படும்.

இதனிடையே ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் இரண்டு தமிழ்ப்பள்ளிகளின் போட்டியாளர்கள் நவம்பர் 4ஆம் தேதி கோலாலம்பூர் பூப்பந்து அரங்கில் நடக்கவிருக்கும் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறுவார். மாபெரும் இறுதிச் சுற்றில் வெற்றிபெற்று ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் கிண்ணத்தை வெல்லும் தமிழ்ப்பள்ளிக்கு வெ.5,000, இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் தமிழ்ப்பள்ளிக்கு வெ.3,000, அரையிறுதிச் சுற்றுக்கு நுழைந்த இரண்டு அணிக்கு வெ.1,000 தொகை வழங்கப்படுவது மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என்று சுரேந்திரன் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற போட்டியாளர்கள் இந்தியா, பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுக்கோன் பூப்பந்து அகாடமியில் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பை எஸ்எம்சி வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.