வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சிலம்பத்தை மீண்டும் சீ விளையாட்டுப் போட்டியில் இணைக்க பாடுபடுவோம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சிலம்பத்தை மீண்டும் சீ விளையாட்டுப் போட்டியில் இணைக்க பாடுபடுவோம்!

கோலாலம்பூர்,செப்.30-
பல்வேறு சவால்களை சந்தித்துள்ள மலேசிய சிலம்பக் கழகம் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதோடு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அதன் தேசியத் தலைவர் ஏ.என்.விஸ்வலிங்கம் கூறினார். இதில் மிக முக்கியமாக சீ விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தை மீண்டும் இடம் பெறச் செய்வதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, இந்தியர்களின் மூத்த பாரம்பரியக் கலையான சிலம்பத்தின் மகத்துவத்தை மற்ற நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கூட்டரசுப் பிரதேசம், லாபுவான் மாநிலங்கள் உள்ளிட்ட 14 மாநிலங்களில் சிலம்பக்கழகம் செயல்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் சிலம்பத்தைப் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

வரும் டிசம்பர் 20ஆம்,22ஆம் தேதிகளில் தேசிய சிலம்பப் போட்டி ஜொகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இளையோர்களுக்கான சிலம்பப் போட்டி அடுத்த ஆண்டு பேராக் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளில் மலேசிய சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் இலவசமாக சிலம்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் வேளையில் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளிலும், பயிற்சிகளை வழங்க கழகம் ஆயத்தம் செய்து வருகிறது. பள்ளிகளின் புறப்பாட கல்வியில் சிலம்பம் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் கழகம் உறுதியாக இருந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

40 ஆண்டுகளாக மலேசிய விளையாட்டுப் பேரவையில் சிலம்பக் கழகம் இணைப்புக் குழுவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மலேசிய விளையாட்டு மன்றத்தின் அங்கீகாரத்தோடு மாநில ரீதியில் தீவிரமாக செயல்பட்டு வரும் கழகம் வெற்றிகளை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை என்று அண்மையில் தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஸ்வலிங்கம் மேற்கண்டவாறு கூறினார். இக்கூட்டத்தில் கழகத்தின் துணைத் தலைவர் ஆர்.டி. உதயகுமார், செயலாளர் என். ராஜேந்திரன் கலந்து கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன