வங்சா மாஜூ, அக்.1- 
எல்.சி.டி. தொலைக்காட்சியைத் திருடி அதை மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்ற பலே திருடன் கைவசமாக சிக்கினான். 31 வயதுடைய அவன் கடந்த சனிக்கிழமை அன்று இரவு மணி 11.00 அளவில் ஸ்தாப்பாக்கிலுள்ள கம்போங் புவாவில் கைது செய்யப்பட்டான்.

தொடக்கக்கட்டமாக போலீஸ் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன் இதே குற்றத்திற்காக 14 முறை சிறை தண்டனையை அனுபவித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஸ்தாப்பாக் போலீஸ் நிலையத்தின் தலைவர் துணை சுப்ரிண்டன் வீ பீ செங் தலைமையிலான சிறப்பு குழு அந்த ஆடவனை கையும் களவுமாக பிடித்தது.

இதனிடையே, வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் முஹம்மட் ரோய் சுஹாய்மி சரிஃப் கூறுகையில், போலீசின் தொடக்கக்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆடவன் போலீசாரால் தேடப்பட்டு வந்ததோடு அவன் திருட்டு மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.

அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள்தான் ஆகின்றது. இருந்தும் அவன் அதே குற்றத்தை புரிந்துள்ளான். அவன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தொடர்பில் விசாரிக்கப்பட்ட போது அந்த மோட்டார் சைக்கிள் டாங் வாங்கி மாவட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

தற்போது அவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு 1959 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 15(1)(டி) மற்றும் குற்றவியல் சட்டவிதி செக்ஷன் 379(ஏ)இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முஹம்மட் ரோய் சுஹாய்மி சரிஃப் குறிப்பிட்டார்.