கோலாலம்பூர், அக். 2-

மாநில மக்களுக்கான சமூக மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தும் வகையில் தனது தரப்பு அரசாங்க துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

மாநில அரசின் பல துறைகள் பல்வேறு நோக்கங்களுக்காக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளன. ஆனால், அலுவலுக சீரமைப்பு, புதிய கார்களை வாங்குதல் முதலானவற்றை தவிர்க்கும்படி அவற்றிடம் தெரிவித்து விட்டோம். காரணம், மக்களின் ஒவ்வொரு சென்னும் மாநில மக்களின் சமூக நல மேம்பாட்டிற்கு நாம் பயன்படுத்த வேண்டும்.

இது ஒரு கடினமான முடிவு என்பது எனக்கு தெரியும். காரணம், மாநிலத்தை மேம்படுத்த அரசாங்க அதிகாரிகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், நாம் புதிய கார்களை வாங்கவும் அரசாங்க அலுவலகங்களை சீரமைக்கவும் இது சரியான நேரம் அல்ல என்பதை அவர்கள் அனைவரும் புரிந்துக்கொள்வார்கள் தாம் நம்புவதாக நேற்று கோம்பாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம்மிற்கு பின்னர் மாநில மந்திரி புசாராக என்னை நியமித்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை எனது அலுவலகத்தை சீரமைக்கவில்லை. காலிட் காலத்தில் இருந்த நாற்காலியையே இன்னமும் நான் பயன்படுத்தி வருகிறேன். மேஜை உள்ளிட்ட அதே தளவாடங்களை இன்னமும் பயன்படுத்தி வருகிறேன்.

அதிகமான பண வசதியுடன் இருக்கும் உரிமை எனக்கு இல்லை. காரணம், இது மக்களுக்கு சொந்தமானது. மந்திரி புசாராகிய எனக்கு சொந்தமானது அல்ல என அஸ்மின் அலி கூறினார்.