ஈப்போ, அக். 2-

சித்தியவான் அருகிலுள்ள சுங்கை வாங்கி அரச மலேசிய கடற்படைப் பிரிவின் தடுப்புக் காவல் அறையில் இரண்டு வீரர்கள் மரணமடைந்தது தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் இன்று விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படும் நிக் முகமட் பய்காகி (வயது 28) மற்றும் முகமட் லைலால் துய்மான் (வயது 26) ஆகிய இருவரின் மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரையில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ பாலாவான் ஹஸ்னான் ஹாசான், மரணமடைந்த இருவருடன் சேர்த்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் 30 வயதுடைய மற்றொரு கடற்படை வீரர் மஞ்சோங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

இன்று நாங்கள் தடயவியல் சோதணையை மேற்கொண்டு வருகிறோம். அதோடு, நாங்கள் கைப்பற்றிய சிசிடிவி கேமரா பதிவு தொடர்பிலும் விசாரணையை மேற்கொள்ளவிருக்கிறோம்.

எங்களது விசாரணையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையக குழுவும் உதவியாக உள்ளது. இவ்விவகாரத்தில் போலீஸ் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருவதோடு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும் என டத்தோ பாலாவான் ஹஸ்னான் கூறினார்.