போர்ட்டிக்சன் அக் 2-

தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சியான மஇகாவின் சட்டமன்ற தொகுதியான போர்ட்டிக்சனை வென்றெடுக்கும் முயற்சியில் சிப்பாங் மஇகா இளைஞர் பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் நெகிரி மாநில இளைஞர் பகுதியினரோடு இணைந்து 2 நாட்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும், பல்வேறான நடவடிக்கைகளையும் மஇகா இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் அரங்கேற்றினர்.

சிப்பாங் தொகுதி மஇகா இளைஞர் பகுதி தலைவர் கோபிராஜன்,நெகிரி மாநில இளைஞர் பகுதி தலைவர் ஷண்முகம், நெகிரி மஇகா தொகுதி இளைஞர் பகுதி துணைத்தலைவர் முகுந்தன் பொன்னையா உள்ளிட்டவர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். மக்கள் சந்திப்பு, துப்புரவுப்பணிகள் என பல விதமான நடவடிக்கைகளுக்கு வித்திட்டனர். முதல் நாள் போர்ட்டிக்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஆலயத்தின் தலைவர் பன்னீர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மதியம் போர்ட்டிக்சன் வட்டாரத்தை சார்ந்த ஒரு அரவணைப்பு இல்லத்தில் 60 மாணவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து தாமான் பெர்மாத்தாவைச்சார்ந்த குடும்பங்களுக்கு தீபாவளி பொருட்கள் வழங்கப்பட்டன.

மாலை தாமான் சிலாசே இளைஞர்களுக்கு நட்புமுறை புட்சால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதற்கு அந்த பகுதியின் தலைவர் சுக்ரி ஒத்துழைப்பு கொடுத்தார். அதனைத்தொடர்ந்து போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் டி.என் 50 கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதற்கு மஇகா தேசிய இளைஞர் பகுதியின் செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இவருடன் தினாளன் டி.ராஜகோபால் அவர்களும் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றம் செய்தார்.

 

2ஆம் நாள் காலை கம்போங் ஆயர் மலெலே பகுதியில் இலவச சந்தைக்கு வித்திட்டு 100 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து பி.டி.உத்தாமா பகுதியில் உள்ள இந்தியர் இடுகாட்டை சுத்தம் செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது.

2 நாள் நிகழ்ச்சியில் பல்வேறான நடவடிக்கைகளை அரங்கேற்றியமை மகிழ்ச்சி அளித்தாக அவர்கள் குறிப்பிட்டனர். நெகிரி மஇகா இளைஞர் பகுதி தலைவர் ஷண்முகம் குறிப்பிடுகையில் இது நல்லதொரு முயற்சி இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும் அறிய முடிகிறது.

மக்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படுவதை இது உறுதி செய்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இளைஞர்களின் இந்த நடவடிக்கைகள் போர்ட்டிக்சன் சுற்றுவட்டார மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.