தாப்பா, ஏப். 26-ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பெற்ற வெற்றியானது தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் ஒருமைப்பாட்டுக்கு மக்கள் அளித்த முக்கியத்துவத்தையே காட்டியுள்ளது என்று இதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
அதே வேளையில், தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தாங்கள் ஆற்றிய சேவைக்கு மக்கள் முழு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் இத்தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது என்றார்.
தேசிய முன்னணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இத்தேர்தல் முடிவு தெள்ளத் தெளிவாகக்காட்டுகிறது.பெருவாரியான மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் பிரச்சினைகள் எழுந்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறி இங்குள்ள மக்கள் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர்.
“இவர்களுக்கு இவ்வேளையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் சரவணன்.
இத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் யுஸ்ரி பாக்கிர் 5,006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
யுஸ்ரி மொத்தம் 11,065 வாக்குகள் பெற்ற வேளையில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலிக்கிற்கு 6,059 வாக்குகளும் பார்டி சோசலிஸ்ட் மலேசியா வேட்பாளர் கேஎஸ் பவானிக்கு 1,106 வாக்குகளும் கிடைத்தன.

