வாடிகன், மே 9-அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட் ( 69) , புதிய போப் ஆக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88) , இத்தாலியின் வாடிகன் சிட்டியில் கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை துவங்கியது.

போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்று அர்த்தம்.

இதன் அடிப்படையில் நேற்று புகை போக்கியில் வெள்ளை நிற புகை வெளியானதாகக் கூறப்பட்டது.