கோலாலம்பூர், மே 14 – அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை அதிகாரிகள் பலியான கோர விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய போக்குவரத்து அமைச்சுக்கு 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்க செய்தி தொடர்பாளருமான ஃபஹ்மி சுட்டிக் காட்டினார்.
தவிர, போக்குவரத்து அமைச்சர் குற்றவியல் அல்லாத அம்சங்களை ஆராய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர் .
இதன் அடிப்படையில் இந்தக் கோர விபத்து குறித்து இரு விசாரணை அறிக்கைகள் பெறப்படும் என்று துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் விவரித்தார்.
நேற்று தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை அதிகாரிகளை உட்படுத்திய விபத்தில் 44 வயதான சார்ஜன் எஸ்.பெருமாள் உட்பட 9 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

