கோலாலம்பூர், மே 16- வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம் பாதையை வெளிச்சமிட்டு வழிகாட்டும் ஒளிக்கதிர் ஆசிரியர் ஆவார் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வருணித்தார்.

அறிவும் அறமும் நிரம்பிய ஆரியர்களின் உழைப்பு, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தை உருவாக்கும் தாயின் கருவறை போலவே இருக்கிறது.

கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில் ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது.

“கல்வி கேள்விகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும், முன்னோடியாய் செயல்படுபவர்” ஆசிரியர் என்ற கருப்பொருளில் மலர்கிறது இந்த வருட ஆசிரியர் தினம். மாற்றம் ஒன்றே மாறாதது என்று வாழும் இன்றைய உலகில், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அவர்கள் கல்வியில் கொண்டு வரும் புதுமை, புத்தாக்கங்களின் தேவைகளையும் முதன்மைப் படுத்துகிறது. ஆசிரியர்கள் புதிய யுக்திகளைத் தேடி, மாற்றங்களை ஏற்கும் பொறுப்பான பங்கையும் வலியுறுத்துகிறது.

சிறு வயதிலிருந்து ஒரு மாணவன் எழுத, படிக்க, நற்குணங்களைக் கற்றுக்கொள்ள, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற, ஆசிரியர்கள் ஆற்றும் சேவை, எடுக்கும் முயற்சி இவற்றுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின்னும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் நிறைந்திருக்கிறது என்பதை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சுட்டிக் காட்டினார்.

இந்த நாளில் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

விருப்பு வெறுப்பின்றி சேவையாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!