கோலாலம்பூர், மே 31-
அரசாங்கத்தின் மெட்ரிகுலேஷன் கல்விக்கு 10ஏ பெற்ற அனைத்து மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த உத்தரவாதத்தைக் கல்வி அமைச்சு புறந்தள்ளி ஓர் உத்தரவின் மூலம் ஆயிரக் கணக்கான மாணவர்களின் வாழ்வில் மண்ணைப் போட்டுள்ளதாக மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கடுமையாகச் சாடியுள்ளார்.
கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் எஸ்பிஎம் தேர்வில் குறிக்கப்படும் ஏ- என்பது ஏ ஆக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் மெட் ரிகுலேஷன் கல்விக்கு 10ஏ+ பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தால் ஆயிரக் கணக்கான மலாய்க்காரர் அல்லாத தமிழ், சீன மாணவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வைத் தொலைக்க நேரிடும் என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஒர் இனத்திற்கு மட்டுமே சலுகை காட்டி மற்ற இன மாணவர்களின் வாயில் மண்ணைப் போடுவது நேர்மையற்ற செயலென்றும் இந்தப் பாகுபாடானது அரசின் அராஜக நடவடிக்கை என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற தடைக் கல்லைப் போடும் இந்த நடவடிக்கை மக்களுக்குத் தீராத கேட்டையே விளைவிக்கும் என்றும் வீ கா சியோங் வன்மையாகச் சாடியுள்ளார்.

