ஜார்ஜ் டவுன்,ஜூன் 1-
எஸ்பிஎம் தேர்வில் 7 ஏ மற்றும் அதற்கும் கூடுதலான ஏக்களைப் பெற்ற இம்மாநிலத்தில் உள்ள 37 பள்ளிகளைச் சேர்ந்த 167 இந்து மாணவர்களுக்கு மொத்தம் 70,200 வெள்ளி ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அங்கீகரிக்கிறது. அதோடு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மாநில அரசாங்கம் கொண்டுள்ள தொடர்ச்சியான கடப்பாட்டையும் இது காட்டுகிறது என்று மாநில முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
“ 2024 எஸ்பிஎம் தேர்வில் இந்த மாணவர்களின் அடைவு நிலை கண்டு நான் உண்மையில் பெருமை அடைகிறேன்” என்று இங்குள்ள பரிவுமிக்க சமூக மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
இத்தேர்வில் 9ஏ+ பெற்ற தர்ஷினி சுபாஷ் சன் கேடயம், மடிக்கணினி மற்றும் 450 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை மாநில முதல்வரிடமிருந்து பெற்றார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டாக ஊக்குவிப்பு நிதியை வழங்குவதாக இதன் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்ஏ லிங்கேஸ்வரன் கூறினார்.
ஒரு ‘ஏ ‘க்கு 50 வெள்ளி என்ற அடிப்படையில் இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

