கிளிநொச்சி, அக். 6-

இலங்கையில் தமிழீழ போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான போரில் பல போராளிகள் உள்பட தமிழர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். தற்போது, அங்கு இருதரப்புக்கும் இடையில் போர் நடைபெறாவிட்டாலும் பல தமிழீழ போராளிகள் தங்களின் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழீழ போராளிகளுக்கான புணர்வாழ்வு தொண்டூழிய பணிகளை நம் நாட்டின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எம்.சரவணன் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அண்மையில் இலங்கைக்கு சென்ற அவர், அங்கு நடைபெற்றுவரும் தொண்டூழிய பணிகளை குறிப்பாக கிளிநொச்சியில் பார்வையிட்டார்.

டத்தோ சரவணன் முயற்சியில் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் (Jaffna University) பொறியியல் புலத்தில் (Faculty of Engineering) உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் தமிழீழ போராளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் உறுப்பு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈழப் போரில் பல போராளிகள் உயிரிழந்தனர் அதிகமானோர் கை  மற்றும் கால்களை . இலங்கையின் வட மாநிலத்தில் மட்டுமே 160, 000 மேற்பட்ட தமிழீழ போராளிகள் கை, விரல்கள் மற்றும் கால்களை இழந்துள்ளனர். இத்தகைய உதவிகள் அம்மக்களின் மறுவாழ்விற்கு பெரிதும் உதவும் என்பதோடு அவர்களும் மற்ற மனிதர்களை போல் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஓரளவு பலனாக அமையும் என டத்தோ எம்.சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

செயற்கை விரல்கள் பொருத்தப்பட்டுள்ள தமிழீழ போராளி கிருஷ்ணலீலா நாகமணியுடன் டத்தோ எம்.சரவணன்