அமெரிக்காவின் ஆளில்லா தாக்குதல் விமானத்துக்குப் போட்டியாக சீனா

0
3

 பெய்ஜிங், ஜூலை 18-

அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானங்களுக்குப் போட்டியாக சீனா சி.எச்.-5 ரெய்ன்போ ஆளில்லா விமானங்களின் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளது. சீனாவின் இந்த ஆளில்லா போர் விமானங்கள் அமெரிக்காவின் போர் விமானங்களின் உற்பத்திச் செலவில் பாதி செலவில் தயாரிக்கப்படுகிறது என சீனா பெய்ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் வாங் சாங் தெரிவித்தார். அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஒப்பிடும்போது தங்களுடையது சற்று பலவீனமானதுதான்.

அமெரிக்க ரீப்பர் ஆளில்லா விமானங்கள் 12,000, 15,000 மீட்டர்கள் உயரம் வரை செல்லும். இதன் மூலம் தரையிலிருந்து தாக்கப்படும் வாய்ப்புகளிலிருந்து அது தப்பிவிடும் என்று அவர் கூறினார். ஆனால், சீனாவின் இந்த ஆளில்லா தாக்குதல் விமானம் 9000 மீட்டர்களே செல்லக்கூடியதால் இதனை தரையிலிருந்து தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என அவர் விளக்கமளித்தார்.

 போர் விமானத் தொழில் நுட்பத்தில் சீனா இன்னமும் மேற்கு நாடுகளுக்குச் சமமாக விளங்க முடியவில்லை. இதுதான் சீனா உற்பத்தி செய்யும் அனைத்து விமானங்களின் பலவீனமாகும். அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானம் உலகிலேயே அதிக செலவில் தயாரிக்கப்படுவதாகும். அதாவது 16.9 மில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால் சீனாவின் இந்த ட்ரோன் விமானங்கள் அதில் பாதிச் செலவில் தயாரிக்கப்பட்டு விடும்.

சீனாவின் சி.எச்.-5 விமானத்தின் இறக்கை 21 மீட்டர்களாகும். சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆயுதங்களை இது சுமக்கவல்லது. இது வானில் 60 மணி நேரம் வரை இருக்கும். சுமார் 10,000 கிலோ மீட்டர் வரை பறந்து தாக்குதல் நடத்தவல்லது. எனவே, இந்த ஆயுதச் சந்தையில் சீனாவும் அடியெடுத்து வைத்துள்ளது.