லண்டன், ஜூன் 7-
ஐரோப்பிய லீக் கிண்ணத்தை வென்று, 17 ஆண்டுகள் கிண்ணத்தை வெல்லாத நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த ஆஞ்ச் போஸ்டெகோக்லோவை, பயிற்றுநர் பொறுப்பிலிருந்து நீக்கி, டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர்ஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அண்மையில், ஐரோப்பிய லீக் கிண்ண இறுதியாட்டத்தில், மென்செஸ்டர் யுனைடெட்டை ஒரு கோலில் வீழ்த்திய டோட்டன்ஹாம், 41 ஆண்டுகளில் முதல்முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.
ஆயினும், அந்த வெற்றி, போஸ்டெகோக்லோ அணியில் நிலைத்திருப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கவில்லை.
முடிந்த பருவத்தில், இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த டோட்டன்ஹாம், 17ஆவது இடத்தை பிடித்திருந்ததை, அக்கிளப்பின் உரிமையாளர் லெவி ரசிக்கவில்லை.
ஐரோப்பிய லீக்கை வென்றாலும் போஸ்டெகோக்லோவை நீக்குவதில் அவர் உறுதியாகவே இருந்துள்ளார்.
தற்போது, போஸ்டெகோக்லோவின் நீக்கத்தைத் தொடர்ந்து, பிரெண்ட்ஃபோர்ட் கிளப்பின் தாமஸ் பிராங்க், புதிய பயிற்றுநராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகின்றது.
இதற்கிடையே, டோட்டன்ஹாமின் முடிவை உலகக் காற்பந்து ரசிகர்களும் விளையாட்டு ஆய்வாளர்களும் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.

