கோலாலம்பூர், ஜூன் 10-

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று எஃப் குழு ஆட்டத்தில், ஹரிமாவ் மலாயா தேசிய அணி, அதன் பரம வைரியான வியட்நாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3 மதிப்புமிக்க புள்ளிகளைப் பெற்றது.

இந்த வெற்றியின் வழி, உலகத் தரவரிசையில் 109வது இடத்தில் உள்ள வியட்நாமுக்கு எதிராக 11 ஆண்டுகள் வெற்றிபெறாமல் இருந்தவந்த மலேசிய அணியின் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முதன்மை ஆட்டக்காரர்களில் புதிதாக இணைந்த, மலேசிய குடியுரிமை வழங்கப்பட்ட 4 வெளிநாட்டு வீரர்களின் வருகை, பயிற்றுநர் பீட்டர் சிக்லமோவ்ஸ்கி தலைமையிலான ஹரிமாவ் மலாயா அணி, ஆக்ரோஷமாக களமாடவும் எதிரணியின் தற்காப்பு அரணை தகர்க்கவும் அசாதாரண உத்வேகத்தை அளித்தது.

இதனால், வியட்நாம் அணி பெரும்பாலும் தற்காப்பிலேயே கவனம் செலுத்த வேண்டியிருந்தது. தேசிய அணியின் பகுதிக்கு எந்தவொரு தாக்குதலையும் திட்டமிட முடியவில்லை.

மேலும், மலேசிய குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டு புதிய தாக்குதல் வீரர்களான ஜோவோ விட்டர் ஃபிகுரேடோ மற்றும் ஹோல்காடோ ஆகியோர், ஹரிமாவு மலாயா அணிக்காக தங்களது முதல் ஆட்டத்தில் கோல் அடித்து அசத்தினர்.

முதல் பாதி கோல் இல்லாமல் முடிந்தது. பிற்பாதியில், ஃபிகுரேடோ, எதிரணியின் தற்காப்பு அரணைத் தாண்டி ஹரிமாவ் மலாயாவுக்காக தனது முதல் கோலைப் பதிவு செய்தார்.

58வது நிமிடத்தில் ஹோல்காடோ தேசிய அணியின் 2ஆவது கோலை அடித்தார்.

67வது நிமிடத்தில் கார்பின் ஓங்கும் 88வது நிமிடத்தில் டியோன் கூல்ஸும் முறையே, 3 மற்றும் 4ஆம் கோல்களை புகுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம், இரண்டு வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று மலேசியா எஃப் குழுவில் முதலிடத்தில் உள்ளது, வியட்நாம் மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

லாவோஸ் மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நேப்பாளம் கடைசி இடத்திலும் உள்ளன.