புதுடெல்லி, ஜூன் 12-
லண்டனுக்கு 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேகானி பகுதியில், மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் ரமேஷ் விஷ்வாஸ்குமார் புச்சர்வாடா எனும் பயணி மட்டுமே உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதான பிரிட்டனைச் சேர்ந்த அவர், 11A என்ற இருக்கையில் பயணித்துள்ளார். விபத்து நடந்தபோது அவர் நல்வாய்ப்பாக, விமானத்திலிருந்து வெளியே குதித்ததாக கூறப்படுகிறது.
ரமேஷ், காயங்களுடன் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்து செல்லும் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இதனிடையே, ரமேஷ் என்ற பயணி உயிர்ப்பிழைத்துள்ளதை உறுதிப்படுத்திய காவல் ஆணையர் G.S. மாலிக், அவரை மருத்துவமனையில் போலீஸ் சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.