வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > இளையராஜாவுக்கு ஒரு ரசிகையின் திறந்த மடல்..!
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இளையராஜாவுக்கு ஒரு ரசிகையின் திறந்த மடல்..!

கருத்து தெரிய தொடங்கி 28 ஆண்டுகள், உங்கள் பின்னே வந்த உங்கள் இசை ரசிகை நான்.  உங்கள் ராகத்தை அம்மாவின் கருவிலே கேட்டதால் என்னவோ இன்றும் அதன் மீதான ஜீவன் இன்னும் மாறவில்லை அம்மாவின் பாசத்தைப் போல. ராஜாவின் இசைக்கு புதிய சான்று கொடுக்க நான் புதிதாய் ஒன்றும் எழுதபோவதில்லை.

தமிழ் திரைப்பட இசையின் வளர்ச்சியில் பாபநாசம் சிவன் தொடங்கி மெல்லிசைக்கான முயற்சிகளை ஜி.ராமநாதன், எஸ்.எம் சுப்பையா நாயுடு போன்ற இசை மேதைகள் விரிவாக்கினார்கள். அதன் பிறகு திரை இசைத் திலகம் கே.வீ.மகாதேவன்,  மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா போன்ற பல கலைஞர்கள் இசைக்கு பெரும் பங்காற்றினார்கள். இவர்களின் தொடர்ச்சியாக இளையராஜாவாக வந்த நீங்கள் ஆச்சர்யமிக்க வளர்ச்சியை காட்டீனீர்கள். உங்கள் இசை பழமைக்கு பழமையாகவும் , புதுமைக்குப் புதுமையாகவும் விளங்கியது. இளையராஜாவின் இசையின் தாக்கமில்லாத சமகால இசையமைப்பாளர்கள் இல்லை என்று நிச்சயம் கூறலாம்.

இசை என்பது கதாநாயகனாக உருவெடுத்தது உங்கள் காலத்தில் தான் ராஜா சார். இசை பற்றிய விழிப்புணர்வை உங்கள் இசை ஏற்படுத்தினாலும், முன்னிருந்த இசை மேதைகளின் வழியில், மரபில் நின்று பல புதுமைகளைச் செய்தீர்கள். மேலைநாட்டு சங்கீதம் நன்கு தெரிந்தவர் எனினும் அவற்றை அளவான கலவையில் தாராளமாக தந்தீர்கள். 80-களின் பாடல்கள் மட்டுமே இசை ராஜாங்கம் என்று அடித்துக்கூறும் ராஜா பித்தர்கள் உங்கள் காலத்தில் உருவானார்கள்.
ஒரு வருடத்தில் 50  படங்களுக்கு மேல் நீங்கள் இசையமைத்தாலும் தரத்திலும் (ஒரு சில படங்களை திவிர) அவை சோடை போனதில்லை.

உங்களின் எத்தனையோ ஆயிரம் பாடல்கள் கேட்கும் போதே, தமிழ்மண் வணங்கும், கண்ணீர் கலங்கும், இதயம் சிலிர்க்கும், மெளனம் பேசும், புன்னகையும் இனிக்கும், தெய்வ தரிசனமும் மணக்கும்,  இன்னும் எத்தனையோ செய்யும். எல்லாமே இந்த மெட்டு கட்டும் ராசாவுக்குதான்.

அந்த பண்ணையப்புற ராசா, இன்று கோர்ட்டு சூட்டோடும் ஆர்மேனிய பெட்டியோடும் மலேசிய மண்ணுக்கு இசை ராஜாங்கம் நடத்த வந்திருக்கின்றார். அந்த ஆர்மேனிய பெட்டிக்குள் ஒளிந்திருக்கும் உங்கள் ராகத்தையும், கதறவிருக்கும் வயலின் கீதத்தையும், ஏங்க வைக்கும் குழல் நாதத்தையும், பேச வைக்கும் உங்கள் இசை ஜாலத்தையும் நேரில் பார்த்து.. ரசித்து.. சங்கமிக்க.. காத்திருக்கிறது எங்களின் மனங்கள்.

சூப்பர் சிங்கர் பிரியாங்கா குரலுக்கும் அதன் தோழமைகளுக்கும் இங்கோர் தனிக் கூட்டம் இருக்கு. உங்களின் பின்னணி இசையை மட்டுமே கூர்ந்து கேட்டு ரசிக்க ஜீவன்கள் பல ஏங்கியும் கிடக்கு.  இந்த விருப்பங்கள் எல்லாம் மொத்தமாய் ஓர் உருவில் நாளை இசையரங்கில் மெறுகேரும் என்ற நம்பிக்கையும் மொத்தமாய் பூத்திருக்கு.

புதிய பாணியில் புதிய கோணத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கும் என்று கூறப்பட்டது. இதில் உங்கள் வாயால் ‘தெண்பாண்டி சீமையிலே’ பாடலைக் கேட்கும் ஓர் வாய்ப்பு இந்த ரசிகைக்கு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.  அதற்கான தூதும் அனுப்பபட்டது. முடிந்தால் உங்களின் குழல் ஊதும் கண்ணன், தனித்துவம் நிறைந்த பாடகரும் இசைக்கலைஞருமான அருண்மொழியின் குரலில் ஒரு பாடலைக் கேட்கவும் ஆசை நிறைந்துள்ளது. அதோடு, உங்களின் இசையில் உலகை அளந்த புகழ்பெற்ற பாடல்கள் பட்டியலின் ‘மெட்லி’யும் கேட்டால் அதுவும் இசைவிருந்தாகும்.

கலைவாணியின் இசை மகனே, எத்தனை விமர்சனங்கள் உங்கள் மீது பாய்ந்தாலும் அத்தனையும் தடுத்தாட்கொள்ள உங்களின் திருவாசகம் போதும், கர்வத்தோடு சிவபெருமான் உங்களை காத்து ரட்சித்து தன் நெற்றிக்கண்ணில் பத்திரமாய் பற்றிக்கொள்வார்.  தனியான பயணங்களில் உங்கள் ரசிகர்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் வழித்துணையே உம்மை நேரில் பார்க்கும் எனது பேராசைக்கு நாளை இறுதிநாள். இசை மழையில் உயிரும் இதயமும் நனையும் நாள். இனி இப்படி ஒரு வாய்ப்பு கிட்டுமோ தெரியாது. எங்களை இசையால் மகிழ்ச்சிப்படுத்தும் உங்களை வணங்கி வரவேற்கிறோம் ராஜா சார்.

உங்கள் இசை ரசிகை..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன