புத்ராஜயா, ஜூன் 16-

2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்விக் கழகங்களில் படிப்பைத் தொடர இடமளிக்கப்பட்டுள்ளது.

யூ.பி.யூ. இணையப்பக்கம் முறைமையில் பெறப்பட்ட மொத்தம் 223,624 விண்ணப்பங்களில், 67.33 விழுக்காடு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் உயர்க்கல்வி அமைச்சு கூறியுள்ளது.

அந்த எண்ணிக்கையில், 86,589 மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களிலும், 42,058 மாணவர்கள் பாலிடெக்னிக்குகளிலும் 20,427 மாணவர்கள் சமூக கல்லூரிகளிலும் 1,483 மாணவர்கள் மாரா உயர்கல்விப் பிரிவின் கீழுள்ள நிறுவனங்களிலும் இடம் பெற்றுள்ளனர்.

சிறப்பு ஒதுக்கீட்டு வழி, 17,693 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இதில் 16,189 பேர் B40 பிரிவைச் சேர்ந்தவர்கள், 590 பேர் மாற்றுத்திறனாளிகள், 593 பேர் விளையாட்டு வீரர்கள், 321 பேர் பழங்குடியினர் என உயர்கல்வி அமைச்சு கூறியது.

எந்தவொரு வாய்ப்பும் பெறாத மாணவர்கள், இன்று முதல் ஜூன் 25 ஆம் தேதி மாலை 5 மணி வரையில், யூ.பி.யூ அகப்பக்கம் வாயிலாக 10 நாட்களுக்குள் மேல்முறையீடு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.