ஈப்போ, ஜூன் 20-
எதிர்க்கட்சி தலைவரும் லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினின் மாமியார், நேற்றிரவு கம்போங் சுங்கை ராபாட் தம்பகான் என்ற இடத்திலுள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார்.
அந்த வீட்டின் அறையில் சுயநினைவு இன்றி மீட்கப்பட்ட84 வயது சல்மியா நியாக் மாட் எனும் அம்மூதாட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதேவேளையில், அவரது கணவரான 83 வயது அப்துல் கானி ஙா மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக, பேராக் தீயணைப்பு மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடோன் கூறினார்.
தீ விபத்து குறித்து இரவு 9.19 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்ட வேளை, முதல் தீயணைப்பு வாகனம் சுமார் ஏழு நிமிடங்களில் சம்பவ இடத்தை வந்தடைந்தது. சம்பவ இடத்தை அடைந்தவுடன், வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறை 80 சதவீதம் தீக்கிரையாகியிருந்தது.
அந்த அறையில் உயிரிழந்த மூதாட்டி இருந்த வேளை, மேல் மாடியில் அவரது கணவர் இருந்துள்ளார். மூச்சுத் திணறலுக்கு இலக்கான அவர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டதாக, சயானி அறிக்கையில் கூறினார்.
சம்பவத்தின் போது வீட்டில் இருந்த 18 முதல் 49 வயதுக்கு உட்பட்ட இதர நால்வர் எவ்வித காயங்களும் இன்றி, பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்றிரவு 9.41 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டு, அதிகாலை 2.02 மணிக்கு முழுமையாக அணைக்கப்பட்டதாக சயானி குறிப்பிட்டார்.

