கோலாலம்பூர், ஜூன் 24-
2024ஆம் ஆண்டு STPM தேர்வு முடிவில், தேசிய சராசரி மதிப்பெண் – PNGK 2.85-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவே ஆக அதிகமாக பதிவான மதிப்பெண் ஆகும்.
மலேசியத் தேர்வு வாரியம் – MPM தலைவர், பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமின் முகமட் டாஃப் கூறுகையில், இந்த மதிப்பெண் கடந்த ஆண்டு பதிவான 2.84 என்ற மதிப்பெண்ணை விட 0.01 புள்ளிகள் அதிகமாகும் என கூறினார்.
மேலும், 1,266 மாணவர்கள் அல்லது 3.06 சதவீதம் பேர் 4.00 என்ற முழு மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர், இது 2023-ஆம் ஆண்டை விட 150 மாணவர்கள் அதிகமாகும் என்றாரவர்.
“2023-ஆம் ஆண்டில், ஐந்து பாடங்களிலும் A’க்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் அது 53 பேராக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், 4A’க்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2023-இல் 1,087 ஆக இருந்த வேளை, 2024-இல் 1,228 ஆக உயர்ந்துள்ளதாகவும் இன்று இங்கு நடைபெற்ற STPM 2024 முடிவுகள் அறிவிப்பு தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ டாக்டர் முகமட் அமின் கூறினார்.

