சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜெய்க்கு ஆறு மாதம் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன், ரூபாய் 5,200 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று சாலையின் தடுப்புச்சுவரில் மோதினார் நடிகர் ஜெய். அப்போது, அவருடன் நடிகர் பிரேம்ஜியும் உடனிருந்தார். ஜெய்மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதன் பிறகும் ஜெய் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை இரண்டு நாள்களில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நேற்று நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை, நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

அப்போது அவர் நீதிபதி முன்பாக தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதை ஒப்புகொண்டார். இதையடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக ஆறு மாதம் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன், ரூபாய் 5,200 அபராதம் விதித்து நீதிபதி ஆபிரஹாம் தீர்ப்பளித்தார்.