பிராட்டிஸ்லாவா, ஜூன் 29-

21 வயதுக்குட்பட்டோருக்கான ஐரோப்பிய காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில், ஜெர்மனியை 2க்கு 3 என்ற கோல்களில் வீழ்த்தி, இங்கிலாந்து கிண்ணத்தை வென்றது.

இன்று அதிகாலையில் நடைபெற்ற அவ்வாட்டத்தில், 2 கோல்கள் முன்னிலையை கிட்டத்தட்ட இழந்த போதிலும், இங்கிலாந்து அணி இறுதியில் அதன் வெற்றியை உறுதி செய்தது.

குறிப்பாக, மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஜொனாதன் ரோவ், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் புகுத்திய கோல், இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்தது.

இதுவரையில், இங்கிலாந்து 4 முறை அக்கிண்ணத்தை வென்றுள்ளது. அதில், நடப்பு பயிற்றுநர் லீ கார்ஸ்லி தலைமையில் கிண்ணத்தை வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது அக்கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

“இரண்டாவது முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற மிகப்பெரிய சாதனை. அடுத்த 2 ஆண்டுகளில் இச்சாதனையை மீண்டும் செய்துக்காட்ட வேண்டியது அடுத்த சவாலாக உள்ளது,” என்று கார்ஸ்லி தெரிவித்தார்.