கோலாலம்பூர், ஜூன் 29-
ஒவ்வொரு மாணவரிடமும் பேராற்றல் உள்ளது. அதனை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்ற உண்மையை உணர்த்திய மறைந்த டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா இந்திய சமூகத்தினரின் மனதில் என்றும் நிலைத்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வி ஒன்றே ஒருவருக்கு மதிப்பையும், கெளரவத்தையும் கொடுக்கக் கூடியது. வாழ்க்கையில் ஒருவரை உயர்த்தும் பெரும் சொத்து கல்வியே. இதனைப் பெறுவதற்கு கடின உழைப்பும், இறைவன் மீதான நம்பிக்கையும் மிக முக்கியம் என்பதை மாணவர்களிடத்தில் பதியச் செய்தவர் டாக்டர் தம்பிராஜா என்று ஶ்ரீ முருகன் நிலைய இணை இயக்குநர் சுரேன் கந்தா விவரித்தார்.
“பெற்றோரை மதித்துப் போற்றும் குணமும் வேண்டும். அவர்களின் ஆசிர்வாதம் இருந்தால்தான் எந்தவொரு பிள்ளையும் வாழ்வில் உயர முடியும் என்பதையும் மாணவர்களிடத்தில் இவர் அடிக்கடி வலியுறுத்தி வருவார் ” என்று இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் ஶ்ரீ முருகன் நிலையத்தில் மறைந்த டாக்டர் தம்பிராஜாவிற்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மாணவர்கள், பெற்றோர்கள், ஸ்ரீ முருகன் நிலைய குடும்பத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மலர்களைப் படைத்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
“இந்தியர்களிடையே வறுமையைப் போக்குவதற்கும் அவர்களின் வாழ்வில் உருமாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கல்வி ஒன்றே சிறந்த ஆயுதம்.இந்தச் சிறகின் வாயிலாகவே இவர்கள் சுதந்திரமாகப் பறக்கலாம். இதற்காக தமது வாழ்நாள் இறுதி மூச்சு வரை இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர் டாக்டர் தம்பிராஜா “.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் வாயிலாக கடந்த 43 ஆண்டுகளில் இவர் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளார்.
“இவர் விட்டுச் சென்ற பணியை நாங்கள் தொடர்வோம். அவரின் கொள்கை, நம்பிக்கை மற்றும் இலட்சியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு மையமாக இது தொடர்ந்து பீடுநடைபோடும்” என்றார் சுரேன் கந்தா.

