வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ராஜா தி ஒன் மேன்!! 13 ஆயிரம் ரசிகர்கள் அதிர்ந்தது அக்ஸியாதா!!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

ராஜா தி ஒன் மேன்!! 13 ஆயிரம் ரசிகர்கள் அதிர்ந்தது அக்ஸியாதா!!

புக்கிட் ஜாலில், அக், 8-

மை ஹிவன் இண்டர்நேஷினல் பெருமையுடன் வழங்கிய இசைஞானி இளையராஜாவின் தி ஒன் மேன் இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்தது. இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, 13,500 ரசிகர்கள் முன்னிலையில் அரங்கம் அதிரும் வண்ணம் நடைபெற்றது.

இசைஞானியின் வரலாற்று காணொளியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இளையராஜா தோன்றியப்போது, ரசிகர்கள் அரங்கம் அதிரும்படி கூச்சலிட்டார்கள். வழக்கம் போல ஜனனி ஜனனி என்ற தமது தொடக்கப் பாடலுடன் நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கினார்.

பின்னர், பின்னணி பாடகர் கார்த்திக் ஓம் சிவஓம் என்ற நான் கடவுள் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். பாடல்களுக்கு மத்தியில் இசைஞானி இளையராஜா, அந்த பாடல் உருவான பின்னணியை விவரித்தது, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நான் தேடும் வெவ்வந்தி பூவிது, சொர்க்கமே என்றாலும், பூ மாலையே தோள் சேரவா, காதல் ஓவியம், ஆறும் அது ஆழமில்ல போன்ற புகழ்பெற்ற பாடல்களை இசைஞானி இளையராஜா பாடினார். பாடகர் ஹரிஹரன் நீ பார்த்த பார்வை ஒரு நன்றி, என்னை தாலாட்ட வருவாளா, என் மன வானில் சிறகை விரிக்கும் ஆகிய பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரது பாராட்டையும் பெற்ற பாடகராக மனோ விளங்கினார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை மனோ பாடினார். வலையோசை கலகலகலவென, மாங்குயிலே பூங்குயிலே, சுந்தரி கண்ணால் ஒரு செய்தி, காலம் காலமாக வாழும், காட்டுக்குயிலு மனசுகுள்ள உட்பட பல பாடல்களை பாடி அசத்தினார்.

பாடகர் மது பாலகிருஷ்ணன், தென்றல் வந்து என்னைத் தொடும், என் இனிய பொன் நிலாவே, ராசாத்தி உன்ன காணாத, அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல்களைப் பாடிய வேளையில், சித்ரா, மனோவுடன் இணைந்து பல பாடல்களைப் பாடினார். சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவிற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு வழங்கினார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை அவர் பாடினார்.

தென்பாண்டி சீமையிலே பாடலை இளையராஜா பாடியபோது, ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சி முடிவடைந்து விடுமோ என ரசிகர்கள் கவலையடைந்தபோது, இன்னும் பாடல்கள் இருப்பதாகக் கூறி அரங்கிலிருந்து வெளியேறினார் இசைஞானி.

பின்னர் 45 மணிநேர இடைவேளைக்குப் பிறகு அவர் மேடையில் தோன்றியப்போது, கூட்டம் கலையாமல் இருப்பதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் இளையராஜா. இதயம் ஒரு கோவில் பாடலுடன் சில பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை பின்னிரவு 1.30க்கு முடித்து வைத்தார். இறுதிவரை அரங்கை விட்டு ரசிகர்கள் நகரவில்லை. அப்போது, இவர்கள் இங்கிருந்து செல்ல மாட்டார்கள். நாமே நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோம் என்று அவர் கூறியபோது, அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கவனம் ஈர்த்த மை ஹிவன் இண்டர்நேஷனல்!

ராஜா ஒன் மேன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததோடு, மிகச் சிறந்த முறையில் நடத்திய மை ஹிவன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் உரிமையாளர் ஷாஹுல் அமிட்டை அனைவரும் பாராட்டினார்கள்.

13.500 ரசிகர்கள் திரண்ட ஒரே இசை நிகழ்ச்சியாக இது விளங்குகின்றது. நேர்த்தியான முறையில் புகழ்பெற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படைத்தது மிகுந்த வரவேற்பை பெற்றது. இசைஞானியின் மற்றொரு நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்… மீண்டும் அவரை அழைத்து வாருங்கள் ஷாஹூல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன