மாட்ரிட், ஜூலை 3-
லிவர்பூல் அணியின் போர்த்துகல் ஆட்டக்காரர் டியோகோ ஜோட்டாவும் (வயது 28) அவரது சகோதரரும் ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸமோரா அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததாக ,போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
ஸமோரா அமைந்துள்ள பகுதியில், வியாழக்கிழமை அதிகாலை மணி 12.00 மேல் ஒரு கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாகவும், அதில் 28 மற்றும் 26 வயதுடைய இரு ஆடவர்கள் உயிரிழந்ததாக, காஸ்டில் மற்றும் லியோன் பிராந்திய தீயணைப்புத் துறை, அதன் இணையதள பக்கத்தில் கூறியது.
“நாங்கள் இரு வெற்றியாளர்களை இழந்துவிட்டோம். அவர்களின் மறைவு போர்த்துகல் கால்பந்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொரு நாளும் மதிக்க நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம்,” என்று போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பு அதன் அறிக்கையில் தெரிவித்தது.
உயிரிழந்தவர்களின் பெயர்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அது ஜோட்டாவும் அவரது சகோதரருமாக இருக்கலாம் என்று ஸ்பெயின் போலீஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியது.
அவ்விருவர் பயணித்த லம்போர்கினி கார் பாதையை விட்டு விலகியதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள ஸமோராவில் உள்ள மருத்துவப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள வேளை, அங்கு உடற்கூறு ஆய்வு நடைபெறும் என்று போலீஸ் கூறியது.
ஜோட்டா, கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று திருமணம் செய்திருந்தார். கடந்த பருவத்தில் லிவர்பூல் அணியுடன் பிரீமியர் லீக் கிண்ணத்தையும் அவர் வென்றுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியிலிருந்து ஆன்ஃபீல்டுக்கு வந்திருந்த ஜோட்டா, அனைத்து போட்டிகளையும் உட்படுத்தி 182 ஆட்டங்களில் 65 கோல்களை அடித்திருந்தார்.
அதேவேளையில், போர்த்துகல் அணிக்காக 49 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், இரு முறை UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.
அவரது திடீர் மரணம் லிவர்பூல் ரசிகர்கள் அல்லாது உலக காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.