வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > நால்வர் மரணச் சம்பவம் : ஜெயாவின் கழுத்திலும் காயம்: அவரையும் கொன்றாரா பூபாலன்?
சமூகம்முதன்மைச் செய்திகள்

நால்வர் மரணச் சம்பவம் : ஜெயாவின் கழுத்திலும் காயம்: அவரையும் கொன்றாரா பூபாலன்?

ஜோகூர்பாரு, அக். 8-

ஸ்கூடாய், ரினி ரெசிடன்ஸ், தாமான் முத்தியாரா ரினியில் ஒரே இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டிற்குள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக சவப் பரிசோதனை அறிக்கை கிடைத்திருக்கிறது என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஹஷீம் முகமது தெரிவித்தார்.

வீட்டில் இறந்து கிடந்த பெண்ணின் சவப்பரிசோதனை அறிக்கையும் கிடைத்திருக்கின்றது. அவருடைய கழுத்தில் அழுத்தப்பட்டதன் விளைவாக மரணம் நேர்ந்திருப்பதை சவப்பரிசோதனை முடிவு காட்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அதே சமயம் இவருடைய கணவர் துணியை பயன்படுத்தி தூக்குப் போட்டுக் கொண்டதால் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதையும் சவப்பரிசோதனை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

வீட்டிற்குள் இறந்து கிடந்த பி.ஜெயா (வயது 46) என்பவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருடைய கழுத்தின் தோல் பகுதியில் தெளிவற்ற நிலையில் காயங்கள் இருந்தது. கழுத்தின் சதை திசுக்களிலும், உதட்டிலும், கண்களிலும் சிவப்பு புள்ளிகள் இருந்துள்ளன. தலையணை அல்லது துணியால் அழுத்தினால் இதுபோன்ற பாதிப்பு உடலில் ஏற்படும் என்று அவர் இஸ்கண்டர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.பூபாலன், இவருடைய மனைவி ஜெயா, இத்தம்பதியரின் பிள்ளைகள், பி.ஷர்வின், பி.கிரிஷா ஆகிய நால்வரும் வீட்டிற்குள் சடலங்களாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூபாலனின் மகன், மகளின் கழுத்துப் பகுதி பலமாக இறுக்கப்பட்டதற்கான தழும்புகள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிறிய இடைவார் அவர்களின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் மேல் விவரங்களை இன்னும் திரட்டி வருகிறது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் மற்ற நபர்கள் யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக இதுவரை தெரியவில்லை என்றார் அவர். இந்த குடும்பத்தின் வீட்டிற்குள் வெளிநபர்கள் அத்துமீறி நுழைந்ததற்கான தடையம் எதுவும் இல்லையென்று அவர் சொன்னார். மதுபான விநியோகிப்பாளரான பூபாலன் வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பிரச்னையை எதிர்நோக்கி வந்தார் எனவும், கடந்த நான்கு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் சிகிச்சைக்காக அதிகமான பணத்தை செலவழித்திருக்கிறார் எனவும் பொதுமக்கள் கொடுத்த தகவல் மூலம் அறியமுடிகிறது.

தற்கொலை செய்து கொண்ட பூபாலன் எழுதிய சில கடிதங்களையும் போலீஸ் விசாரணைக்கு கைப்பற்றியது. நாங்கள் தொடர்ந்து மேல் விவரங்களை திரட்டுவோம். மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்புவதற்கு முன்பு முழு அறிக்கை தயார் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன