பந்திங், ஜூலை 6-

தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற பந்திங் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டதாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

“கடந்த பொதுத் தேர்தல்  கொள்கை அறிக்கையில் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்றால் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை நிச்சயம் கௌரவிப்பேன் என்று வாக்குறுதி அளித்தேன்”.

“அதனை இன்றைய நிகழ்ச்சி வழி நிறைவேற்றியதில்  மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன் “ என்றார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான  பாப்பாராய்டு.

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு தலா 500 வெள்ளி ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இந்நோக்கத்திற்காக மொத்தம் 7,500 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதை பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.

ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த ஊக்குவிப்பு நிதி ஒவ்வோர் ஆண்டும் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

அதே வேளையில், இங்குள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்தேர்வில் ஏ தேர்ச்சி பெற்ற  கோல லங்காட் மாவட்ட பூர்வீககுடி மாணவர்கள் 11 பேர் சிறப்பிக்கப்பட்டனர்.

இதே நிகழ்ச்சியில் பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்நோக்கிய  ஜெஞ்சாரோம் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்  வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.